The present paper aims to describe the Irular tribes life style, Irular tribes category, evaluated the city life of Irular and implemented the details of creature through Odiyan poem.
உலக அளவில் தொண்ணூறு நாடுகளில் பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொத்தத் தொகை 37 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, ஐந்து விழுக்காட்டினர்களாக இருந்தாலும், ஏழைகளில் பதினைந்து விழுக்காடாக உள்ளது.
உலகில் ஏழாயிரம் மொழிகள் பேசப்பட்டாலும் அதில் பெரும்பான்மையான மொழிகளைப் பழங்குடி மக்களே பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“1981-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 563 பழங்குடி இனங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 5,16,28,638. இவர்களில் 2,21,000 பேர் இருளர்கள்” (க. குணசேகரன், 2008:99).
இந்த எண்ணிக்கை கொண்ட இருளர்கள் இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் பரவியுள்ளனர். அங்கே சமவெளியாளர் பேசும் மொழியின் முந்தைய குறையைப் பேசுகின்றனர். அவ்வாறே இந்தியாவில் வாழும் இருளப் பழங்குடியின் மொழியை அறிய முடிகின்றது. அதனைப் பின்வரும் கருத்து வெளிப்படுத்தும்.
“… ஆங்காங்கு இவர்கள் வாழ்ந்தாலும் தங்களின் பழைமையான பண்பாட்டை இழக்காமல் பாதுகாத்துக் கொண்டனர். இருளர்கள் இதில் முதன்மையானவர்கள். பழங்குடிகள் பொதுவில் கொடுந்தமிழில்தான் தங்கள் தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் உருவான தெலுங்கு மொழி வேங்கடமலை மற்றும் இன்றைய கோனேரிக் குடுப்பம் என வழங்கப்படும் முந்தைய தொண்டை மண்டலத்தின் எல்லையான வடபெண்ணையாறு வரை பரவி வாழ்ந்த இருளர்களிடமும் செல்வாக்குப் பெற்றது. அதனால் அவர்களின் உச்சரிப்பில் தெலுங்கு கலந்தது. அதேபோல்தான் கன்னடமும் பாலக்காட்டு(க்) கணவாயில் இருந்த காணிக்காரர் உள்ளிட்ட உச்சரிப்பைப் பழக்கப்படுத்திக் கொண்டனர். தமிழ் மொழி இலக்கியவளம் பெற்ற ஒரு மொழியாக உருவான கட்டத்தின் போதும் இருளரின் மொழி உச்சரிப்பு மாறவில்லை. இதனால் அவர்கள் தனிமைப்பட்டனர் (க.குணசேகரன், 2008:88).”
இத்தகு இருளர் பழங்குடி மக்களின் வாழ்வையும், அவ்வினத்தின் உட்பிரிவுகளையும், அவர்கள் சமவெளியாளரை மதிப்பிட்டுப் பார்க்கும் முறைகளையும், உயிரினக் குறிப்புகளையும் ‘ஒடியன்’ கவிதைத் தொகுப்புவழி அறிமுகப்படுத்துகிறது இக்கட்டுரை.